கடந்த ஐ.பி.எல் சீசனில் முதல்பாதியில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிற்பாதியில் நம்ப முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. ஆர்.சி.பி-க்கும், சி.எஸ்.கே-வுக்குமான அந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் பிளேஆஃப்ஸ் முன்னேறலாம். அதேசமயம், சி.எஸ்.கே தோற்றாலும் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் பிளேஆஃப்ஸ் முன்னேறலாம்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி 218 ரன்கள் குவித்து சி.எஸ்.கே-வுக்கு மிகப்பெரிய டார்கெட் வைத்தது. சின்னசாமி ஸ்டேடியத்தில் இது பெரிய டார்கெட் இல்லையென்றாலும், அன்றைக்குப் பெய்த மழை, ஆட்ட சூழலை பேட்மேன்களுக்கு கடினமாக்கியது. சி.எஸ்.கே ஒருகட்டத்தில் வெற்றி பெறுவதை ஒதுக்கிவிட்டு 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியது.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் தோனி ஸ்ட்ரைக்கில் நிற்க, சி.எஸ்.கே பிளேஆஃப்ஸ்ஸுக்குள் நுழைய, 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் இறுதி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கவிட்டார், தோனி. உற்சாகத்தில் ஆர்ப்பரித்த சி.எஸ்.கே ரசிகர்களை அடுத்த பந்திலேயே தோனியின் விக்கெட் எடுத்து அமைதியாக்கினார் யஷ் தயாள். அதற்குப் பிறகு வெற்றிபெற்று பிளேஆஃப்ஸ் சென்ற ஆர்.சி.பி, பின்னர் வெளியேறி, பதக்க கனவை இந்த முறையும் தகர்த்தது.