புதுச்சேரிக்கு உறவினர்களுடன் வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், மிஷன் வீதியிலுள்ள இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த ஒரு ஆட்டோவில் பயணித்திருக்கிறார். புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்த அவர்கள், அந்த ஆட்டோவிலேயே தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இறங்கிக் கொண்டனர். அதன் பிறகு ஸ்டேண்டுக்கு திரும்பிய அந்த ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவில் விலையுயர்ந்த ஐபோன் இருப்பதைக் கண்டார். ஆட்டோவில் பயணித்த சுற்றுலா பயணிகள் ஐபோனை தவறவிட்டதை உணர்ந்து கொண்ட அவர், அதை திருப்பிக் கொடுப்பதற்காக தன்னுடைய சக நண்பர்களுடன் அந்த விடுதிக்குச் சென்றார். ஆனால் அவர்கள் அறையை காலி செய்துகொண்டு சென்றுவிட்டதாகக் கூறியது விடுதி நிர்வாகம்.
அதையடுத்து செல்போனை தவறவிட்டதை தெரிவித்தவுடன், அவர்களின் முகவரியில் இருந்த செல்போன் எண்களை கொடுத்தனர் விடுதி நிர்வாகத்தினர். அந்த எண்களை தொடர்பு கொண்டபோது, அது தங்களுடன் வந்த ஒருவரின் செல்போன்தான் என்றும், ஆனால் தாங்கள் சென்னைக்கு செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்று எதிர்தரப்பில் கூறியிருக்கிறார்கள். உடனே, `பேருந்து எங்கே சென்று கொண்டிருக்கிறது’ என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்க, அவர்கள் பேருந்தின் நடத்துநரிடம் இடத்தைக் கேட்டு `முருகா தியேட்டர் சிக்னலைத் தாண்டிச் செல்கிறோம்’ என்று கூறியிருக்கின்றனர். அதையடுத்து அந்த பேருந்தை `சேஸ்’ செய்து, அந்த பெண்ணிடம் ஐபோனை ஒப்படைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.