கட்டுமானத்தில் இருந்த 4 மாடி சரிந்து விழுந்து விபத்து… பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

By
On:
Follow Us

பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் கட்டுமானத்தில் இருந்த 4 மாடி சரிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் கட்டுமானத்தில் இருந்த 4 மாடிகளைக் கொண்ட கட்டடம் திடீரென சாய்ந்து விழுந்து இடிந்தது. கட்டடம் இடிந்த போது அதில் 20 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சுமார் 15 பேர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

மோப்ப நாய் உதவியுடன் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைத்துறையினர், காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உரிமையாளர், ஒப்பந்ததாரர் உட்பட விபத்துக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றும், “சட்ட விரோத கட்டுமானங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும்” என்றும் கூறினார்.

விளம்பரம்

கர்நாடகாவில் கனமழை: கர்நாடகாவில் திங்கள் மாலையில் இருந்து இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்றும் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் பெங்களூருவின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. எலஹங்கா பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக தொட்ட பொம்மசந்திர ஏரி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி அருகே உள்ள பகுதிகளில் புகுந்ததால் நான்கு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ, பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கின.

விளம்பரம்

மறுபுறம், கோகிலு கிராஸ் மற்றும் யெலஹங்கா பகுதிகளில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகளில் சென்று குடியிருப்புவாசிகளைப் பத்திரமாக மீட்டனர். அங்கு வசித்து வந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் ஹென்னூர்-ஹோரமாவு சாலையில் மழைநீர் வடிகால் மிக மோசமான நிலையில் இருப்பதை கனமழை காட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் உள்ளூர்வாசிகள் விமர்சித்துள்ளனர்.

விளம்பரம்

பெங்களூரு வெளிவட்டச் சாலையில் நாகவாரா அருகேயுள்ள தொழில்நுட்பப் பூங்கா பகுதி வெள்ளக்காடாக மாறியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Also Read |
தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் விஜய்? – குஷியில் ரசிகர்கள்!

அதேபோல், பெங்களூரு வெளிவட்டச் சாலையில் கடபீசனஹள்ளியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எம்பஸி டெக்விலேஜ் தொழில்நுட்பப் பூங்காவின் பிரதான வாயில் மற்றும் பின்வாசல் ஆகியவற்றை போலீசார் மூடினர். இதனால் கோபமடைந்த ஊழியர்கள் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

எலஹங்கா பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உள்ளூர் மக்கள் மீன்பிடித்துப் பொழுதை கழித்தனர். பெங்களூருவில் நேற்று 20க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற 4 விமானங்கள் கனமழை காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன.

விளம்பரம்

பல இடங்களில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக பெங்களூருவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements