இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தன.
ஐடி துறை பங்குகள் உயர்வுடனும், பார்மா துறை பங்குகள் சரிவுடனும் இருந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. எனினும், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
9 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 138.74 புள்ளிகள் சரிந்து 80,081.98 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.17% சரிவாகும்.
ஆரம்பத்தில் 79,921.13 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ், 79,891.68 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் இன்றைய அதிகபட்சமாக 80,646.31 புள்ளிகள் வரை உயர்ந்தது. வணிக நேர முடிவில் 138 புள்ளிகள் சரிந்து 80,081.98 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனப் பங்குகள் 4.77% உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா 2.33%, எச்சிஎல் டெக் 1.27%, டிசிஎஸ் 1.27%, எச்டிஎஃப்சி வங்கி 1.24%, இன்ஃபோசிஸ் 1.18%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.00%, மாருதி சுசூகி 0.28%, கோட்டாக் வங்கி 0.27% உயர்ந்திருந்தன.