‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படத்தில் வக்கீல் வண்டு முருகனாக வரும் வடிவேலு மற்றும் அவரின் கூட்டாளிகள் போன்று, குஜராத்தில் தில்லாலங்கடி வேலையில் ஈடுட்ட மோசடி நபர், தானாகவே போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.
போலி போலீஸ், போலி சிபிஐ அதிகாரி, போலி தாசில்தார் வரிசையில் இதுவரை கேட்டிராத வகையில் போலி நீதிபதி ஒருவர் கைதாகியுள்ளார். ரூம் போட்டு புதுசு புதுசாக யோசித்து அப்பாவிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்தவர், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். 37 வயதான இவர் காந்தி நகரில் நீதிமன்றம் போன்று செட் அமைத்து, அதில் அலுவலகம் நடத்தி வந்துள்ளார். சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளார்.
பின்னர், நில பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு வழக்கிலும் உள்ள மனு தாரர் மற்றும் எதிர் தரப்பினருக்கு கொக்கி போட்டுள்ளார். இதையடுத்து, இரு தரப்பினரையும் தனித் தனியாக தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, உங்களது நில பிரச்சினையைத் தீர்க்க அரசு தன்னை நியமித்துள்ளதாக புருடா விட்டுள்ளார். வாலண்டியராக வழக்கில் ஆஜரான அவர், சம்பந்தபட்டவர்களை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்துள்ளார். மோரிஸ் சாமுவேலின் அலுவலகத்தை பார்க்கும் மக்களுக்கு, அவர் உண்மையிலேயே நீதிபதி தான் என நம்பும் அளவிற்கு கணகச்சிதமாக தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அப்போது, தனக்கு அதிகமாக யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதமாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். இதுபோன்று கடந்த 2019 முதல் தற்போது வரை ஏராளமான நில பிரச்சினைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் :
நெருங்கும் மாநாடு தேதி.. முக்கிய பட்டியலை வெளியிட்ட தவெக! – வெளியான அறிவிப்பு!
இந்நிலையில், பால்டி பகுதியைச் சேர்நத பாப்ஜுஜி தாகூர் என்பவர், மோரிஸ் சாமுவேலிடம் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அதற்கான வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்ட மோரிஸ் சாமுவேல், வருவாய் பதிவேடுகளில் தாகூர் பெயரை சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலி நபரிடம் இருந்து வந்தது என்று மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில், கரஞ்ச் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 5 ஆண்டுகளாக நீதிபதியாக நடித்து மோரிஸ் சாமுவேல் பலரிடம் மோசடி செய்து வந்தது அம்பலமானது. பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் போலி போலீஸ், போலி சிபிஐ அதிகாரி வரிசையில், தற்போது போலி நீதிபதி ஒருவர் மோசடியில் சிக்கி கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.