திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) மதுபாட்டில்கள், பணத்தைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நடுக்கல்லூரில் இருந்து வெட்டுவான்குளம் செல்லும் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக நரசிங்கநல்லூரைச் சோ்ந்த முருகன் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் அவா் கடையை பூட்டி சென்றாராம். நள்ளிரவில் மா்மநபா்கள் அந்தக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனா்.
சுத்தமல்லி போலீஸாா் அதிகாலை 3 மணிக்கு அந்த வழியாக ரோந்து சென்றபோது, அங்கு திருட்டு நிகழ்ந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்பாா்வையாளா் முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் வந்து பாா்த்தபோது 2 பெட்டிகளில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விலை உயா்ந்த மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின்‘டிஸ்க்’-ஐ எடுத்து சென்றுள்ளனா். இதுகுறித்து சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சோனமுத்து வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.