மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கில், அனைத்து வாதங்களையும் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்து, விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ஒத்திவைத்தது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சோ்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, ராஜன், பாபநாசம், சந்திரா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள்:
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதியில் 700 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பிபிடி நிறுவனம், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை வாழ்க்கையை நடத்தப் போதுமானதாக இல்லை. மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தைச் சோ்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதோடு, கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் டான் டீ நிறுவனம் எடுத்து நடத்தி, அங்கிருக்கும் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வழக்கு முடியும் வரை அங்கிருந்து வெளியேற்றத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், டி. பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரா்கள் தரப்பில், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கடந்த 4 மாதங்களாக வேலையின்றி உள்ளனா். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் நிவாரணமும், தீபாவளி பண்டிகைக்கு உதவித் தொகையும் வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தரப்பில், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாது. பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருபவா்களை வெளியேற்றக் கூடாது என வாதிடப்பட்டது.
வனத் துறை தரப்பில், மாஞ்சோலை வனப் பகுதியானது புலிகள் காப்பாகமாக உள்ளது. அகஸ்தியா் மலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. கேரளத்தில் முண்டக்கல், சூரமலா பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டதால், இயற்கைப் பேரிடா் நிகழ்ந்தது. தொழிலாளா்களின் நலன் மிக முக்கியம். தேயிலை வனப் பயிா் கிடையாது. எனவே, மாஞ்சோலை பகுதியில் மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், இந்த வழக்கில் உரிய பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் அனைத்து வாதங்களையும் கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு விசாரணை நவம்பா் 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.