வயநாடு இடைத்தேர்தல் வேட்புமனு விண்ணப்பத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதியிலுமே அவர் வெற்றியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலத்திற்குமான சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது. அப்போது அதே அறிவிப்பில், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வயநாடு தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் தரப்பில் இருந்து வயநாடு தொகுதி வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸ் அங்கு தீவிரமாக தேர்தல் பணிகளை செய்துவருகிறது. இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சத்யன் மோக்கேரியும், பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர், வயநாட்டில் கல்பெட்டா பேருந்து நிலைய பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். இந்தப் பேரணியில், வேட்பாளர் பிரியங்கா காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, அவரது சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி முடிவில் பேசிய பிரியங்கா, “எனக்கு 17 வயது இருக்கும்போது, 1989ம் ஆண்டு என் தந்தைக்காக முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொண்டேன். இப்போது 35 ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து பல தேர்தல்களில் எனது தாய், சகோதரர் மற்றும் சக காங்கிரஸ்காரர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், முதல்முறையாக எனக்காக நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்” என்று பேசினார்.
இதையும் படியுங்கள் :
முக்கிய தலைவர்களின் கட்டவுட்டுகள்.. தவெக மாநாடு மேடையில் இடம்பெற்ற அந்த வாசகம்.. வெளியான வீடியோ!
பின்னர் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அவரது கணவரான ராபர்ட் வதேராவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்றும், தனக்கு எதிராக 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
.