இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த நவம்பர் 8, 2022 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்றார். இவரது பதவிக்காலம், அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்தார். இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.
இதையும் படிக்க:
ரூ.1 கோடிக்கு தங்கம்… ரூ.5 கோடிக்கு வீடு.. பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தநிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதிவரை (6 மாதங்களுக்கு) தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவிவகிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியான ஸ்ரீ நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியத் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். நவம்பர் 11, 2024 முதல் அமலுக்கு வரும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
.