காஷ்மீரில் ராணுவ வாகனத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள புடாபத்ரி (Butapathri) பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு ராணுவ வீரர்கள், இரண்டு போர்ட்டர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று கந்தர்பல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அண்மைக்காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைந்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஜூன் 9-ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அதே நாளில் ரியாசி பகுதியில் புனித யாத்திரை சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 9 பேர் கொல்லப்பட்டனர்.
Also Read |
Exclusive: தவெக முன்வைக்கும் கொள்கை என்ன? – விளக்கிய பத்திரிகையாளர் அய்யநாதன்
ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து நடந்த இரு தாக்குதலில் 6 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஜூலை 8-ஆம் தேதி கத்துவாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்களும், ஜூலை 16-ஆம் தேதி தோடாவில் நடந்த தாக்குதலில் 4 வீரர்களும் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 14-ஆம் தேதி தோடாவில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணமடைந்தார்.
குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாகத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி சோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளி கொல்லப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர், கந்தர்பால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
.