வேலூர் மாநகராட்சி அண்ணா சாலை அருகே அமைந்துள்ள பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மேடைக்கடைகள் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கின்றன. வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் தரைக்கடை வியாபாரிகள் கடைகள் அமைக்க திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பகுதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகம் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டு, வேலூரில் மக்கான் பகுதியில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதையடுத்து பழைய மீன் மார்க்கெட் வளாகம் இருந்த இடத்தில் மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு, அண்ணா சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சத்தில் 250 கடைகள் கட்டப்பட்டன. கடைகள் அனைத்திலும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு தகர மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கடையும் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக பிரித்து அண்ணா சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உண்டான கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் அந்த வளாகத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டன.