உத்தரப் பிரதேசத்தில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மாநிலம் முழுவதும் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய யோகி ஆதித்யநாத், “சமஸ்கிருத மொழிக்கு ஆதரவாக இருப்பது மனிதநேயத்தைக் காப்பதைப் போன்றது. முந்தைய அரசுகள் சமஸ்கிருத கல்வியை புறக்கணித்து விட்டனர்.
சமஸ்கிருதம் வெறும் தேவபாஷை மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றிலும் பயன்படுத்தக்கூடிய அறிவியல் மொழியாகும்.
சமஸ்கிருதத்தின் தனித்துவமான பண்புகள் அதை எளிமையாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | உலகளவில் கவனம் பெறும் இந்திய அனிமேஷன் துறை: பிரதமர் மோடி பெருமிதம்!
சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் விதமாக, உத்தரபிரதேசம் முழுவதும் குருகுல கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை யோகி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உதவித்தொகை திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய யோகி ஆதித்யநாத், ”இதற்கு முன்பு 300 சமஸ்கிருத மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகைக்கு தகுதி பெற்றிருந்தனர், அதிலும் வயது வரம்புகள் இருந்தன.
ஆனால், தற்போது புதிய திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இதன் பயன்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் நவம்பர் 30-க்குள் சாதிவாரி கணக்கெடுப்பு!
குருகுல மாணவர்களுக்கு இலவச தங்குமிடங்கள் மற்றும் உணவு வழங்குபவர்களுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும். தகுதியான ஆச்சார்யார்களை (ஆசிரியர்கள்) பணியமர்த்துவதற்கான சுயாட்சி இயங்குமுறையும் இந்த நிறுவனங்களுக்கு இருக்கும்” என்று அவர் கூறினார்.
உதவித்தொகை நிதியை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் பெறுவதை உறுதி செய்யும் விதமாக அனைத்து மாணவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்குமாறு அறிவுறுத்திய யோகி மாநிலம் முழுவதுமுள்ள 69,195 மாணவர்களுக்கு ரூ.586 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.