மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏராளமான வெளிமாநில, வெளியூர் பயணிகள் தீபாவளியையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை பாந்த்ரா-கோரக்பூர் விரைவு ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர்.
ரயில் நடைமேடையில் நிறுத்தப்படுவதற்கு முன்பே பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ரயிலில் ஏற அவசரம் காட்டினர். அதில் பலர் கீழே விழுந்தனர். சிலர் கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு ரயிலில் இடம்பிடிப்பதில் மும்முரம் காட்டிய மனிதாமிபானமற்ற செயல்களையும் காண முடிந்தது.
இதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. காயமடைந்த அனைவரும் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.