தொழிலதிபர் அதானியையும் அவரின் மதிப்பையும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவரான (செபி) மாதவி புச் பாதுகாப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்தார்.
தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி, நாட்டின் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் மட்டுமே தீவிரமாக குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுடன் விவாதிக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று (அக். 27) ஹிண்டன்பர்க் – அதானி – மாதவி புச் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு விடியோவை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
இதில், பேசிய ராகுல் காந்தி, மாதவி புச்சின் ஊழல் நினைத்துப் பார்க்காத அளவுக்குப் பெரிதாகி வருகிறது.
சில்லறை முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள மாதவி, அதானியின் நலன்கள் மற்றும் அவரது உயர்த்தப்பட்ட பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாக்க செபியை பயன்படுத்தியிருக்கலாம்.
சாமானிய இந்தியர்களையும் அவர்களின் முதலீடுகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்து, பெரிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்த மோசடிகளை விசாரித்து, பொதுமக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்துகிறது.
தொழிலதிபர் அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்பு உள்ளதாக 2023 மார்ச் மாதம் மக்களவையில் பேசியபோது இடைநீக்கம் செய்யப்பட்டேன். அதானி குறித்த எனது பேச்சு குறித்து பிரதமர் மோடி அச்சமடைகிறார் என விடியோவில் ராகுல் பேசியிருந்தார்.