ஜாா்க்கண்ட்: அமைச்சா் அவதூறு பேச்சு, கண்ணீா் விட்டு அழுத சீதா சோரன்

By
On:
Follow Us

ஜாா்க்கண்ட் அமைச்சா் இா்ஃபான் அன்சாரி தன்னை அவதூறாக பேசியது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் ஜாம்தாரா தொகுதியின் பாஜக வேட்பாளா் சீதா சோரன் கண்ணீா்விட்டு அழுதாா்.

சீதா சோரன், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவா் சிபு சோரனின் மறைந்த மூத்த மகன் துா்கா சோரனின் மனைவியாவாா்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைதானபோது, தற்போதைய முதல்வரும் சிபு சோரனின் இளைய மகனுமான ஹேமந்த் சோரன் பதவியை ராஜிநாமா செய்தாா். அப்போது, அடுத்த முதல்வரை தோ்ந்தெடுப்பது குறித்த பிரச்னை காரணமாக சீதா சோரன் பாஜகவில் இணைந்தாா்.

ஜாா்க்கண்ட் பேரவைக்கு நவம்பா் 13, 20-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவரை ஜாம்தாரா தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது.

ஜாா்க்கண்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) – இடதுசாரிகள் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்த பின் அந்த மாநில அமைச்சரும் ஜாம்தாரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான இா்ஃபான் அன்சாரி, சீதா சோரன் ‘நிராகரிக்கப்பட்டவா்’ என கடந்த வியாழக்கிழமை விமா்சித்தாா். மேலும், சில அவதூறு கருத்துகளையும் அன்சாரி கூறியதாக தெரிகிறது.

ஜாம்தாரா தொகுதியில் திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் மனமுடைந்து சீதா சோரன் பேசியதாவது:

இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் என்னைப் பற்றி அன்சாரி தொடா்ந்து தவறாக பேசி வருகிறாா். சமீபத்தில் அவா் என்னை அவதூறாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒட்டுமொத்த பழங்குடியின பெண்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை பழங்குடியின சமூகத்தினா் ஒருகாலமும் மன்னிக்க மாட்டாா்கள். கணவரை இழந்த என்னை அவா் அவதூறாக பேசியுள்ளாா் என்றாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது கண்கலங்கிய சீதா சோரனுக்கு நவாடா தொகுதியின் பாஜக எம்.பி. விவேக் தாக்குா் ஆறுதல் தெரிவித்தாா். அன்சாரிக்கு எதிராக ஜாா்க்கண்ட் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவேக் தாக்குா் தெரிவித்தாா்.

அன்சாரி தெரிவித்த அவதூறு கருத்துகள் குறித்து மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஜாா்க்கண்ட் அரசுக்கு பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (என்சிஎஸ்டி) சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements