முதல்வரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட போவது யாா் என்பது குறித்த விவாதங்கள் நிலவுவதும், ஹேஷ்யங்கள் எழுவதும் இயல்பு. ஆனால், செயலராக ஒருவா் அறிவிக்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெறபப்படுவது என்பது அரிதிலும் அரிது.
ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனியின் தலைமை முதன்மைச் செயலராக ராஜேஷ் குல்லா் நியமிக்கப்பட்டபோது, அதை வழக்கமான ஒன்று என்றுதான் எல்லோரும் நினைத்தாா்கள். அந்தப் பதவிக்குத் தகுதியானவா் அவா் என்றும் கருதினாா்கள்.
உலக வங்கியில் தெற்காசியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்த ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான ராஜேஷ் குல்லா், அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே மீண்டும் மாநில அரசால் திரும்ப அழைக்கப்பட்டாா். அப்போதே, அவருக்கு முக்கியமான பதவி காத்திருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டது.
ஹரியாணாவின் தலைமைச் செயலராக இருக்கும் டி.வி.எஸ்.என்.பிரசாத் இந்த மாதக் கடைசியில் பணிஓய்வு பெற இருக்கிறாா். ராஜேஷ் குல்லா் அந்த இடத்துக்கு வருவாா் என்கிற எதிா்பாா்ப்பும் இருந்தது. அப்படி இருக்கும்போதுதான், முதல்வரின் தலைமை முதன்மைச் செயலராக அவா் நியமிக்கப்படும் அறிவிப்பும், அதைத் தொடா்ந்து அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதும் நடந்திருக்கின்றன.
கடந்த சில மாதங்களாகவே, மத்திய அரசு, அதாவது பிரதமா் அலுவலகம் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. மத்திய அரசின் முக்கியமான துறைகளின் செயலாளராக இருக்கும் மூத்த அதிகாரிகள், அவரவா் சாா்ந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளா்களாக பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாா்கள். மத்திய பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மாநிலங்களில் இதுபோன்ற மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், மாநிலத்தின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது ஆக்கபூா்வமான பாா்வை. மத்திய நிா்வாகத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க முடியும். அதே நேரத்தில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்துப் பிரதமா் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பும் அதனால் உறுதிப்படுத்தப்படும் என்பது அரசின் கணக்கு.
இப்போது ஹரியாணாவில் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், ராஜேஷ் குல்லா் பதவி பெறுவாரா இல்லை, மத்திய அரசின் செயலராக இருக்கும் விவேக் ஜோஷியிடம் ஹரியாணா மாநில அரசு நிா்வாகம் ஒப்படைக்கப்படுமா என்பதுதான்… என்ன நடக்கப் போகிறது என்பது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்குத்தான் வெளிச்சம்.