மகாராஷ்டிராவில் உள்ள அபாபூர் வனப்பகுதிக்கு சென்று காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று தொழிலாளிகளில் ஒருவர் காட்டு யானை மிதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்றைய காலக்கட்டத்தில் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். ஆபத்தான பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருபுறம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தாலும் இளைஞர்களின் செல்ஃபி மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு செல்ஃபி மரணம் நிகழ்ந்துள்ளது. காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் காட்டு யானை மிதித்து உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீகாந்த் ராமச்சந்திர சாத்ரே (23) என்பவர் கேபிள் பதிக்கும் பணிக்காக தனது நண்பர்களுடன் கட்சிரோலிக்கு சென்றார். சம்பவத்தன்று அபாபூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர், அதைப் பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக யானையை அங்கு பார்த்த அவர், அதனுடன் தூரமாக நின்று செல்ஃபி எடுக்க முயன்றார்.
யானையுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தபோது, ஆத்திரமடைந்த காட்டு யானை 3 பேரையும் வெகுதூரம் துரத்தியது. ஸ்ரீகாந்த்தின் நண்பர்கள் எப்படியோ தப்பித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். ஆனால் ஸ்ரீகாந்த் அந்த யானையிடம் மாட்டிக்கொண்டார். தனது தும்பிக்கையால் அவரை தூக்கிப் போட்டு மிதித்ததில் ஸ்ரீகாந்த் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து ஸ்ரீகாந்த்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்தின் மரணத்திற்கு மகாராஷ்டிரா அரசு இழப்பீடு வழங்குமா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க:
Most Polluted Cities | டெல்லி, மும்பை, பெங்களூரு அல்ல… உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?
இதற்கிடையில், சிட்டகாங் மற்றும் கட்சிரோலி ஆகிய வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானை வெளியே வருவதாக அதிகாரிகளுக்கு சம்பவ தினத்தன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் தகவல் கிடைத்தது. முட்னூர் வனப்பகுதிக்கு உட்பட்ட அபாபூர் வனப்பகுதியில் யானை நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல யூடியூபர் தம்பதி.. நெகட்டிவ் கமெண்ட்டுகள் காரணமா.. நடந்தது என்ன?
முன்னதாக ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஒருவர் காட்டு யானை மிதித்து உயிரிழந்தார் மற்றும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், நான்கு வெவ்வேறு சம்பவங்களில் யானைகள் சிலரை மிதித்துக் கொன்றன. மேலும், இந்த ஆண்டு செப்டம்பரில் நீலகிரி மாவட்டத்திலும், ஆகஸ்ட் மாதத்தில் சத்தீஸ்கர் மாவட்டத்திலும் யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் யானைகள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்களால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
.