நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கி, அதற்கு அடுத்த ஆண்டில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மக்களவை தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக 1872-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் முறையாக 1951-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, 2021-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முடிவுகள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம் ஆகியவையும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், இறுதி முடிவை மத்திய அரசே மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலையில், மத்திய அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு, மக்களவைத் தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்பட உள்ளது. மறுவரையறை பணிகள் முடிவடைந்த பிறகே, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு தென் மாநிலங்களும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தொகுதி மறுவரையறை மூலம், தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், வட மாநிலங்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, தொகுதி மறு வரையறை மூலம் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதற்கான வழிவகைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் :
தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? – தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. அதிகபட்சமாக, சுமார் 20 கோடி மக்கள் தொகையுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருந்தது. 6 லட்சம் பேருடன், சிக்கிம் மாநிலம் கடைசி இடத்தில் இருந்தது.
ஆனால், தற்போது நாடு தழுவிய அளவில் 145 கோடியாக அதிகரித்து, மக்கள் தொகை அடிப்படையில் முதல் நாடாக இந்தியா உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பெயர், குடும்ப விவரங்கள், மதம் உள்ளிட்டவை சேகரிக்கப்படுகிறது. அதோடு, பழங்குடியினர் அல்லது தாழ்த்தப்பட்டோரா என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
.