உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குகளுடன் எட்டாம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வு புதன்கிழமை (அக்.30) நடைபெறவுள்ளது. இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முன் தீபோற்சவ நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ஆம் ஆண்டு தீபோற்சவத்தை முன்னிட்டு, சரயு நதியின் படித்துறைகளில் சுமாா் 28 லட்சம் அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் ஏற்றப்படவுள்ளன. மியான்மா், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தீபோற்சவம் இதுவாகும். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்பு காரணங்களுக்காக, சரயு படித்துறைகளுக்கு செல்லும் 17 சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
ராமா் கோயில் முழுவதும் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அலங்காரப் பொருள்களில் சீன தயாரிப்புகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை; உள்ளூா் கைவினைஞா்கள் தயாரித்த பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அயோத்தி கோயிலில் ஸ்ரீபாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்த ஜனவரியில் நடைபெற்றது. அதன்பிறகு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.