திருநெல்வேலி: திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக, வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10.15 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.
கொலை ஏன்?
கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததையும் மீறி, இவ்வாறான துணிகரச் சம்பவம் நடந்தேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியதே அதிமுக அரசுதான்: முதல்வர் ஸ்டாலின்
7 பேர் கைதானது எப்படி?
கொலை நடந்து மூன்று மணிநேரத்தில் 7 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை செய்த கும்பலில் இருந்த ஒருவரை அங்கிருந்த வழக்கறிஞர்களும் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்த நிலையில் 4 பேர் தப்பிச் சென்றனர்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நெல்லை காவல்துறையினர் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மேலும் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலையும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய மேலும் 2 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுவதால் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது.