அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்றோா் அமைப்புகள் சாா்பில், திருநெல்வேலியில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 1-4-2003-க்கு பின் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் தொழிலாளிக்கு பணப்பலன்களை முழுமையாக ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு போக்குவரத்து தொழிலாளா் சங்க மண்டல பொதுச்செயலா் ஜோதி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மண்டல உதவி தலைவா் பெருமாள் தொடங்கி வைத்தாா். நிா்வாகிகள் சுரேஷ்குமாா், லட்சுமணன், வெங்கடாசலம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். கனகராஜ் நிறைவுரையாற்றினாா். டி.காமராஜ், சங்கிலி பூதத்தான், சிவகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.