அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன ராபின் உத்தப்பா, கிரிக்கெட்டிற்கு இடையே ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வந்துள்ளார். தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை, முறையாக செலுத்தாமல் மோசடி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த உத்தப்பா, 2007-ம் ஆண்டு தோனி தலைமையில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு, கொல்கத்தா, சென்னை அணிகளுக்காக விளையாடி சாதித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகுவை சேர்ந்த உத்தப்பா, கிரிக்கெட்டில் பிஸியாக இருந்த போதும் மறுபுறம் பிசினசிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
இவர், பெங்களூருவில் உள்ள சென்டாரஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை, பி.எஃப். எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொகையை முறையாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால், கர்நாடக மாநிலம் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பி.எஃப். முறைகேட்டில் ஈடுபட்ட ராபின் உத்தப்பா, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 23 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பாவுக்கு கடந்த 4 ஆம் தேதி பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வருகின்ற 27 ஆம் தேதிக்குள் முறைகேடு செய்த பணத்தை முழுமையாக செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவறும் பட்சத்தில் ராபின் உத்தப்பா கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பி.எஃப். நிதி முறைகேடு தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பாவுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.