இந்தியாவின் தற்போது 77 லட்சம் பணியாளர்கள் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்வதாகவும், 2030 ஆம் ஆண்டில் இது 2.5 கோடி என்ற எண்ணிக்கையை தொடும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் கணிசமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டு தனது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
2.5 கோடி இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் விஷயம் அல்ல எனவும் இது மிகப்பெரிய சாதனை என்றும் கூறிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது என்பதே நம்முடைய முதன்மை குறிக்கோளாக இருந்து வருகிறது” என்பதையும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக ஆன்லைன் வழியாக உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவனம் வேலை வாய்ப்பை தேடி அலைந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளதற்காக அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை குறிப்பிட்டு, அதனை சமாளிக்க சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் பங்கு எந்த அளவிற்கு முக்கியமானது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பின்மையை சமாளிக்க டெலிவரி நிறுவனங்களின் கணிசமான அளவில் பங்காற்றியுள்ளதை பெருமையாக கூறினாலும், சமீப காலமாக அதிகரித்துள்ள சாலை விபத்துகளை பற்றியும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சனைகளை பற்றி கூறிய அவர், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு பொட்டலங்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அதிவேகமாக செல்ல முற்படுவதால் சாலை விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் “இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 40 சாலைவிபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதில் 20 பேர் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 18 லிருந்து 45 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்படத்தக்கது. குறிப்பாக ஒரு வருடத்தில் இரு சக்கர வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80,000 – ஐ தாண்டும் எனவும் அதில் 55,000 உயிரழப்புகள் தலைகவசம் அணியாததால் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அதில் 10,000 உயரிழப்புகள் சாலையின் தவறான பக்கத்தில் வாகனத்தை செலுத்துவதால் ஏற்படுவதாகவும், நிதின் கட்காரி அவர்கள் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சொமேட்டோ நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 50000 ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான பயிற்சியை அளித்தது. இதனை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் இது போன்ற பயிற்சிகள் மூலம் சாலை விபத்தால் ஏற்படும் விபத்துகள் வெகுவாக குறையும் என்று சொமேட்டோ நிறுவனத்திற்கு தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.
.