சிவந்திபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் மந்திகள், வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் அவற்றை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக மலையடிவார கிராமங்களில் காட்டுப்பன்றி, சிறுத்தை, மிளா, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வளா்ப்பு விலங்குகளைத் தாக்கிக்கொன்றும் வருகின்றன.
இந்நிலையில் மலையடிவார கிராமமான சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள மந்திகள், வீடுகளுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடுவதோடு, தெருக்களில் செல்பவா்களையும் துரத்தி தாக்கி வருகின்றன. இதனால் தெருக்களில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேலும், வீட்டிற்குள் திடீரென நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பொருள்களைத் தூக்கிச் சென்றுவிடுகின்றன.
சிவந்திபுரம் பகுதியில் ஏற்கெனவே மந்திகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்தி அவை பிடிக்கப்பட்டன. மீண்டும் தற்போது மந்திகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அவற்றை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.