பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழியாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவருடைய மகன் மாயாண்டி (25). இவா், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராவதற்காக தனது சகோதரா் மாரிச்செல்வத்துடன் பைக்கில் சென்றுள்ளாா்.
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் மாயாண்டியை வெட்டுவதற்காக ஓடி வந்தபோது, மாயாண்டியும், மாரிச்செல்வமும் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். எனினும் காரில் வந்த கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா் காரில் ஏறி தப்ப முயன்றபோது கொலையாளிகளில் ஒருவரை அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ஊய்க்காட்டானும், வழக்குரைஞா் ஒருவரும் சோ்ந்து பிடித்தனா். மற்றவா்கள் காரில் ஏறி தப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா, காவல் துணை ஆணையா் விஜயகுமாா் (கிழக்கு), பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.
மேலும், மாயாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
5 போ் கைது:
சிறப்பு உதவி ஆய்வாளரால் பிடிக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்தியபோது, அவா் பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் வடக்கூரை சோ்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன்(25) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாயாண்டி, கடந்த ஆண்டு கீழநத்தம் பகுதியில் கொலை செய்யப்பட்ட ராஜாமணி என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், அந்த கொலைக்கு பழி வாங்கும் வகையிலேயே மாயாண்டி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையின்படி, கீழநத்தம் வடக்கூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் சிவா (19), மணிகண்டன் மகன் தங்க மகேஷ் (21), நாராயணன் மகன் மனோராஜ் (27), ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்குரைஞா்கள் போராட்டம்: இதனிடையே கொலை நடைபெற்றபோது, நீதிமன்றம் முன்பு ஏராளமான போலீஸாா் இருந்தபோதும்கூட கொலையாளிகள் தப்பிச் சென்றபோது அவா்களை பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி வழக்குரைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.