குவைத் சிட்டி: குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்டியில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேசினார். இந்திய தொழிலாளர்களுக்கு அவர் விருந்து அளித்தார். அவர்களோடு விருந்தில் பங்கேற்றார்.
இரண்டாம் நாளான நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமதுவை அவர் சந்தித்து பேசினார். அப்போது குவைத் அரசின் மிக உயரிய ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் மன்னர் வழங்கினார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே குவைத்தின் உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
விருதை வழங்கிய குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது கூறும்போது, “இது குவைத்தின் மிக உயரிய விருது ஆகும். இந்த விருதை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. இந்தியா, குவைத் இடையிலான உறவு மேலும் வலுவடையும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “உயரிய விருதை வழங்கிய குவைத் மன்னருக்கு மனதார நன்றி கூறுகிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பில் இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன். இரு நாடுகள் இடையிலான உறவு புதிய உச்சத்தை தொடும்” என்று தெரிவித்தார்.
சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பின்னர் குவைத் பிரதமர் முகமது சபா அல் சலேமை அவர் சந்தித்தார். இறுதியில் பாதுகாப்பு, கூட்டுறவு துறை, கலாச்சாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் இணைவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகள் இடையே மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குவைத் பயணம் குறித்து அந்த நாட்டு ஊடகத்துக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு, எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, குவைத் இடையே வலுவான உறவு நீடிக்கிறது. குவைத்தின் அதிகாரப்பூர்வ கரன்சியாக இந்திய ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது. குவைத்தின் திறன்சார் தொழிலாளர்கள் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்.
இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் குவைத் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு எல்பிஜி வாயு விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தில் குவைத் இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பெற்ற 20 சர்வதேச விருதுகள்: சவுதி அரேபிய அரசு சார்பில் முஸ்லிம் அல்லாத தலைவர்களுக்கு அந்த நாட்டின் உயரிய கவுரவமான ‘ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்’ விருது வழங்கப்படுகிறது. 2016-ல் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
2016-ல் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது வழங்கப்பட்டது.
2018-ல் பாலஸ்தீனம் சார்பில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன விருது’ அளிக்கப்பட்டது.
2019-ல் மாலத்தீவு அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்’ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2019-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத் விருது’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2019 -ம் ஆண்டில் பஹ்ரைன் அரசு சார்பில் ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்’ விருது அளிக்கப்பட்டது.
2020 -ல் அமெரிக்க அரசு சார்பில் லெஜியன் ஆப் மெரிட்’ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டில் பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ வழங்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டில் தீவு நாடான பப்புவா நியூ கினியா சார்பில் ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருது வழங்கப்பட்டது
கடந்த 2023-ம் ஆண்டில் எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆப் தி நைல்” விருது வழங்கப்பட்டது.
2023-ல் பிரான்ஸ் அரசு சார்பில் ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டில் கிரீஸ் அரசு சார்பில் ‘கிரான்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டில் பலாவ் நாட்டின் சார்பில் ‘பலாவ் குடியரசு எபகல் விருது’ வழங்கப்பட்டது.
2024-ல் பூடான் சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டியூக் காலப்’ விருது வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருது அளிக்கப்பட்டது.
2024-ம் ஆண்டில் நைஜீரியா அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் நைஜர்’ விருது வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டில் டொமினிகோ சார்பில் ‘டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.
2024-ல் கயானா சார்பில் ‘ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் கயானா’ விருது வழங்கப்பட்டது.
2024-ல் பார்படோஸ் சார்பில் ‘ஆர்டர் ஆப் பிரீடம் ஆப் பார்படோஸ்’ விருது வழங்கப்பட்டது.
2024-ல் குவைத் அரசு சார்பில் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருது வழங்கப்பட்டது.
இவை தவிர ஐ.நா. சுற்றுச்சூழல் துறையின் ‘தி எர்த்’ விருது, பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தூய்மை இந்தியா விருது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் விருது, சியோல் கலாச்சார அறக்கட்டளையின் சியோல் அமைதி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.