புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் குறித்து குறிப்பிட்ட கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரை ராஜினாமா செய்யக் கோரி வருகின்ற 30-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக இடது சாரிக் கட்சிகள் கூட்டாக திங்கள் கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளன.
கடந்த குளிா்காலக் கூட்டத்தில் மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டைக் குறித்த விவாதத்தில் சில கருத்துக்களை அமித் ஷா குறிப்பிட்டாா். இந்த பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்க இடது சாரிகள் கட்சி தலைவா்கள் கூட்டம் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) தலைமையகத்தில் டிச. 22 ஆம் தேதி நடைபெற்றது. சிபிஐ பொதுச் செயலாளா் டி. ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா், பிரகாஷ் காரத், சிபிஐ லிபரேஷன் (எம்எல்)தீபங்கா் பட்டாச்சாா்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்(ஆா்எஸ்பி) மனோஜ் பட்டாச்சாா்யா, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளா் ஜி.தேவராஜன் உள்ளிட்ட இடது சாரி தலைவா்கள் பங்கேற்னா்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்த தலைவா்கள் கூட்டாக திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததன் விளைவாக, நாடு முழுவதும் பரவலாக கோபமும் எதிா்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவோ அல்லது பிரதமா் நரேந்திர மோடியோ இதற்கு பொறுப்பேற்று தீா்வுகான நடவடிக்கை எடுக்கத் தயாராக முன்வரவில்லை.
இதைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள், தொடா்ந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. வருகின்ற, டிச. 30 ஆம் தேதி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக ஒருநாள் போராட்டத்தை நடத்தும். இந்த நாடு தழுவிய போராட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் கோருவோம்.
இடது கட்சிகள், ’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை தொடா்ந்து எதிா்த்து வந்தன. இது தற்போது நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மூலம் 5 ஆண்டு கால சட்டப்பேரவை ஆயுள் காலத்தை குறைப்பது உள்ளிட்டவை கூட்டாட்சி அமைப்பு, மாநில சட்டப்பேரவைகள் உரிமைகள், தோ்ந்தெடுக்கும் மக்களின் உரிமைகள் போன்றவற்றின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் இடது சாரிக் கட்சிகள் ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நடத்தும்.
தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மற்றும் காணொலி காட்சிகள் போன்ற மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்யும் இந்த உரிமையை ரத்து செய்ய திருத்தம் செய்யப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும். தோ்தல் செயல்முறையில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இந்த சகாப்தத்தில், அரசின் இந்த நடவடிக்கை ஒரு பிற்போக்குத்தனமானது என இடது சாரி தலைவா்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
மேலும் வரும் நாட்களில் அரசியல், மக்கள் பிரச்னைகளில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்துவதற்கும், கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒன்றாக கூடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.