வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
ஸ்ட்ராபெரி லென்செரியா, சென்டாரஸ் லைஃப்ஸ்டைல், பெர்ரிஸ் பேஷன் அவுஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 2018-2019-ஆம் ஆண்டில் ராபின் உத்தப்பா கடன் அளித்திருந்தார். இதனால், இந்த நிறுவனங்களில் இயக்குநராக உத்தப்பா நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனங்களில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தாமல், மோசடி நடந்ததாகப் பதிவான வழக்கில், உத்தப்பாவுக்கு அண்மையில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுதொடர்பாக ராபின் உத்தப்பா விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் இந்த நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலோ, அன்றாடப் பணிகளிலோ ஈடுபடவில்லை என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தாம் அளித்த கடனை குறிப்பிட்ட நிறுவனங்கள் திரும்பத் தராததால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தப்பா கூறியுள்ளார்.
வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் கேட்ட விவரங்கள் தொடர்பாக தனது சட்டக் குழு பதில் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். விளக்கம் அளித்த பின்னரும் பிடி வாரண்ட் பிறப்பித்த நிலையில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தனது தரப்பு சட்ட ஆலோசகர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் உத்தப்பா கூறியுள்ளார்.
.