தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கும், தெலங்கானாவின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே நிலவும் மோதலின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பெண் உயிரிழந்து தெரிந்து அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை. அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? கண் அல்லது கிட்னியைத்தான் இழந்தாரா? அவரது வீட்டிற்கு சென்று அவரை சினிமா பிரபலங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது கவலைப்பட்டீர்களா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இப்படி, “புஷ்பா 2” சிறப்பு காட்சி கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த பிரச்சனை தெலங்கானா சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், அதற்கு தனது தரப்பு விளக்கத்தை உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுனோ, “என்னைப்பற்றி ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அதிகாரிகளையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது” என்று பதில் கொடுத்தார்.
இப்படி இந்த பிரச்சினைக்கு அல்லு அர்ஜுனின் அலட்சியமே காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சில அரசியல் பின்னணியும் உள்ளதாக பேசப்படுகிறது. அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்நேகா ரெட்டியின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான கச்சரலா சந்திரசேகர் ரெட்டி நீண்ட காலமாக காங்கிரசில் பணியாற்றி வந்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு சந்திரசேகரராவின் பாரத ராஷ்டிர சமதியில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகார்ஜுன சாகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நாகார்ஜுன சாகரில் தனது மருமகன் அல்லு அர்ஜுனை அழைத்து மண்டபம் ஒன்றின் திறப்பு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார்.
வழிநெடுகிலும் வரவேற்பு பதாகைகள், போஸ்டர்கள், பெரிய பெரிய கட் அவுட்டுகள் என அந்த ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்த நிலையில், அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக மட்டும் பெரும் திரள் கூட்டம் கூடியது.
Also Read | தியேட்டருக்குள் பாப்கார்ன் நுழைந்தது எப்படி? – பாப்கார்னின் கதை!
ஆனால், நாகார்ஜுன சாகர் தொகுதியில் வேட்பாளராக நோமில் பகத்தை நிறுத்தியது பி.ஆர்.எஸ். இதனால் அதிருப்தியில் இருந்த கச்சரலா சந்திரசேகர் ரெட்டி, தனது தாய் வீடான காங்கிரசுக்கு மீண்டும் திரும்பினார். அந்த சமயம் மக்களவைத் தேர்தல் வந்த நிலையில், காங்கிரசில் மல்காஜ்கிரி தொகுதியில் போட்டியிட முயன்றார். இம்முறையும் அவருக்கு ஏமாற்றமே கிட்டியது.
இதனால் அதிருப்தியில் சந்திரசேகர் ரெட்டி, காங்கிரசில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், அல்லு அர்ஜுன் கைது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி சந்திர கிஷோருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவரை காண நந்தியாலாவில் கூடிய பிரம்மாண்ட கூட்டம்தான், அன்றைய பேசு பொருளானது.
இதனால் அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டார். தனது மாமா பவன் கல்யாணிற்கு எதிராக தனது நண்பருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இப்படியாக, நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது ரசிகர்களிடையே அல்லு அர்ஜுன் கொண்டுள்ள செல்வாக்கு.
இதனால் தான், சட்டமன்றம் வரை “புஷ்பா 2” பிரச்சனை எதிரொலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அல்லு அர்ஜுனின் அரசியல் விஜயத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
.