காங்கிரஸ் Vs பாஜக; அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் இருந்த பின்னணி இதுதான்!

By
On:
Follow Us

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையான அம்பேத்கரை காங்கிரஸ் மதிக்கவில்லை என்றும், தொடர்ந்து காங்கிரஸ் அரசாங்கங்களால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்றும் பாஜக மீண்டும் மீண்டும் கூறியது. பாரத ரத்னா ஏன் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது? காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கருக்கு ஏன் விருது மறுக்கப்பட்டது. அவர் எப்போது விருதைப் பெற்றார். மதிப்புமிக்க விருதைப் பெற்ற பிரபலங்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விரிவாகப் பார்க்கலாம்.

பாரத ரத்னா:

1954ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பாரத ரத்னா விருது, பாலினம், இனம், வேலை அல்லது அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு துறையிலும் சிறந்த சேவை அல்லது சாதனைக்காக வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருது. இது கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை ஆகியவற்றில் பங்களிப்பு செய்தவர்களுக்காக வழங்கப்பட்டது.

பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வழங்குவார். ஆனால், பாரத் ரத்னா விருதுக்கான முக்கிய அமைச்சகமாக உள்துறை அமைச்சகம் இருக்கிறது. இந்த விருதுக்கான பொதுவான நடைமுறை, உள்துறை அமைச்சகம் பாரத ரத்னா விருதுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பரிந்துரைகளைப் பெறுகிறது. அதனை உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்புகிறது. மேலும் பிரதமர், யாரிடம் வேண்டுமானாலும் கலந்தாலோசித்து இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு வழங்கலாம். ஆருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

பாரத் ரத்னா விருது பெற்றவர்கள்:

1954ல் துவங்கி இதுவரை மொத்தம் 53 பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளனர். இதில், 2024ம் ஆண்டில் மட்டும் ஐந்து பேர் பாரத் ரத்னா விருதைப் பெற்றுள்ளனர். இதுவரை வழங்கப்பட்டதிலேயே 2024ல் தான், ஒரே ஆண்டில் அதிக நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பாரத ரத்னா விருதைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அதன்படி, முன்னாள் முதல்வர் ராஜாஜிக்கு 1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான எஸ் ராதாகிருஷ்ணன், அவர் துணை குடியரசுத் தலைவராக இருந்தபோது வழங்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அவர் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கோவிந்த் பல்லப் பந்த், அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் பிசி, ராய் முதல்வராக இருந்தபோதும் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாட்டில், சிவி ராமன், முன்னாள் முதல்வர் காமராஜ், எம்.ஜி.ஆர்., எம்.எஸ். சுப்புலட்சுமி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சி. சுப்ரமணியம் உள்ளிட்டோர் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர்.

இந்த விருது மரணத்திற்குப் பின் வழங்கப்படுவதில்லை. ஆனால் விதிவிலக்கானதாகக் கருதப்படும் சந்தர்ப்பங்களில், இறந்த பிறகு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. இதுவரை 18 பேர் மரணத்திற்குப் பின் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் தலைவரான காமராஜுக்கு 1976 ஆம் ஆண்டு அவசரநிலையின் போது மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு ராஜீவ் காந்தி அரசால் 1988ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் இவ்விருது வழங்கப்பட்டது.

இவர்களைப் போல், லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், பி.வி. நரசிம்ம ராவ், சௌத்ரி சரண் சிங், கர்பூரி தாக்கூர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோருக்கும் மறைந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு விருது வழங்கப்பட்டது எப்போது?:

ராம்விலாஸ் பாஸ்வான், ஷரத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்களால் ஆதரவு பெற்று பிரதமராக வி.பி. சிங் தேர்வு செய்யப்பட்டு 1989 டிசம்பர் மாதம் மத்தியில் ஜனதா தள அரசு அமைந்தது. இந்த அரசிற்கு பாஜக வெளியில் இருந்து தனது ஆதரவை தந்துவந்தது. பிறகு அன்றை பாஜகவின் தலைவர் எல்.கே. அத்வானி 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி சமஸ்திபூரில் (பீகார்) கைது செய்யப்பட்டார். அவரின் கைதைத் தொடர்ந்து பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதற்கிடையில் 1990 ஆம் ஆண்டு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

காங்கிரஸில் இருந்து விலகி 1977ல் பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு, 1991ல் சந்திரசேகர் தலைமையிலான அப்போதைய ஜனதா தளம் (எஸ்) அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. குல்சாரிலால் நந்தாவுக்கு 1997 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் விருது வழங்கியது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆகிய இரு முக்கிய காங்கிரஸ்காரர்களுக்கு நரேந்திர மோடி அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பாஜக சொல்வது என்ன?:

கடந்த 17ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து 18ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, “அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75ம் ஆண்டு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் சாதனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சிகளும் மக்களும் வெவ்வேறு பிரச்சினைகளில் வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது வெளிப்படையானது. ஆனால், விவாதங்கள் எப்போதும் உண்மையின் அடிப்படையில் நடக்க வேண்டும். காங்கிரஸ் உண்மைகளை தவறாக வழிநடத்தும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

பல முறை காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குத் தாங்களே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார்கள். 1955 நேரு தனக்குத் தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார். 1971ல் இந்திரா காந்தி தனக்குத் தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார்.

1990ல் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. பாஜக ஆதரவு தந்த அரசு ஆட்சியில் இருந்தது. அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்தக் குற்றச்சாட்டை கடந்த 2023ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடந்த பேரணியின் போது பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அவர், “பல ஆண்டுகளாக அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் நிராகரித்தது. 1990ல், பாஜக ஆதரவு தந்த வி.பி.சிங் ஆட்சியில் தான் மறைந்த டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் சொல்வது என்ன?:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா கடந்த 21-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 150 நகரங்களில் காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸார் செய்தியாளர்களைச் சந்திப்பு நடத்தி, அமித் ஷாவை ராஜினாமா செய்யக்கோருவார்கள். மேலும், அவர் அம்பேத்கரை இழிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பார்கள்.

24-ம் தேதி, எங்கள் மாவட்டத் தலைமையகத்தில் பேரணி நடத்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராஜினாமா செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.

அதன்படி இன்று அமைச்சர் அமித் ஷா, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியதைக் கண்டித்தும், அவர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரியும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சென்னை ராஜாஜி சாலை, துறைமுகம் நுழைவுவாயில் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்திச் சென்று மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் சந்தித்து குடியரசுத் தலைவருக்கு மனு அளித்தனர்.



நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements