1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க கவசம் ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க கவசம், மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
அந்தவகையில், நிகழாண்டு மண்டல பூஜை வியாழக்கிழமை (டிச. 26) நடைபெறும் நிலையில், தங்க அங்கி ஊா்வலம் ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஊா்வலத்தில் பக்தா்கள், திருவிதாங்கூா் தேவஸ்வம் (டிடிபி) அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இந்த ஊா்வலம் புதன்கிழமை (டிச. 25) பிற்பகலில் பம்பை கணபதி கோயிலை வந்தடைந்தது. மாலை சந்நிதானத்தை (சபரிமலை கோயில் வளாகம்) சென்றடைந்தது.