இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது.