குறையும் குழந்தை பிறப்பு.. அதிகரிக்க ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிரடி திட்டம்

By
On:
Follow Us

“நாம் இருவர் நமக்கு இருவர்… நாம் இருவர் நமக்கு ஒருவர்… நாமே இருவர் நமக்கேன் ஒருவர்…” இதெல்லாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பிரபல வாசகங்கள்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் தற்போது நிலைமை தலைகீழாக மாறி, குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவில் ஒருகாலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1994-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிட முடியாது என்ற நிலையை மாற்றி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்களே கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டிய தேவை குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

முன்னர் 4 முதல் 5 குழந்தைகள் வரை பெற்ற நிலையில், தற்போது தம்பதிகளிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்துகொண்டே வருகிறது என்றும், குழந்தை பிறப்பு குறைந்துகொண்டே சென்றால், 2047-ஆம் ஆண்டுக்கு பின், அதிக அளவில் முதியோர்களே இருப்பார்கள் என்றும், சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பொருள் ஈட்டுவதில் கவனம் செலுத்திய தென் கொரியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியால், பணிகளுக்கு தற்போது பிற நாட்டினரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவிலேயே டாப்.. சுத்தமான காற்று வீசும் நகரம்.. நெல்லைக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு!

குழந்தை பிறப்பு அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கொள்கையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையலாம்.

அதாவது மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தென்மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிப்பு 15-லிருந்து 12 சதவீதமாக குறையும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. “அதேநேரத்தில் வட மாநிலங்களின் பங்களிப்பு 27-ல் இருந்து 29 சதவீதமாக அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் குறைந்தபட்சம் 3 குழந்தைகள் பெற்றிருந்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements