நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் மும்பைவாசி என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கைதான நபரின் நோக்கம் என்ன? காவல் துறை விளக்கம்
சைஃப் அலிகான் தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரைக் கத்தியால் குத்தியவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
நேற்று சத்தீஸ்கரில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர் நிரபராதி என்று காவல்துறையினர் தெரிவித்த நிலையில், நேற்று உண்மையான குற்றவாளி எனக் கூறி ஒருவரைக் கைது செய்தனர்.
முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் எனும் அந்த நபர் தனது கிராமத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தானே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குற்றவாளி பாந்த்ராவிலுள்ள விடுமுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தீப் ஷேகானே பேசுகையில், “ஷரிஃபுல் இஸ்லாமை 5 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸாரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் போலீஸிடம் இல்லை. அவர் 6 மாதங்களுக்கு முன்பு மும்பை வந்தார் என்று அவர்கள் கூறினார்கள். அது தவறானது. அவர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார். அவரது குடும்பம் இங்கு உள்ளது. இது 43ஏ பிரிவின் கீழ் மீறலாகும். இதுவரை அவரிடம் முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.