இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 737 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலின் நீதி அமைச்சகம் கூறியது.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, “ஆரம்ப 42 நாள் போர்நிறுத்தத்தில் காஸாவில் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 33 பேர் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன் எக்ஸ் பக்கத்தில், “ஒப்புக்கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் கட்டமைப்பைத் திரும்பப்பெற முடியாது. ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது.
எனவே, போர் மீண்டும் தொடங்கினால் அதற்கு ஹமாஸ் மட்டுமே பொறுப்பு” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், “அனைத்து பணயக்கைதிகளும் இஸ்ரேலுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அமெரிக்க ஆதரவுடன் போரை மீண்டும் தொடங்கும் உரிமை இஸ்ரேலிடம் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.