Last Updated:
Sharon Raj murder case | கிரீஷ்மா, தாய் சிந்து, மாமா நிர்மல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது.
கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை மூறியன்கரையைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன்ராஜ் பி.எஸ்.சி. ரேடியாலஜி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி கிரீஷ்மா வீட்டிற்கு தனது நண்பருடன் ஷாரோன்ராஜ் சென்றுள்ளார். நண்பர் வெளியே நின்று கொண்டிருக்க ஷாரோன் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஷாரோன், நண்பருடன் சேர்ந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காதலி கிரீஷ்மா வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்ததாகவும் அதில் இருந்துதான் வயிறு வலிக்கத் தொடங்கியதாகவும் அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷாரோனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் ஷாரோன்ராஜுக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் அவருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.
அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீஷ்மாவை கைது செய்தனர். அவரும் கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை போலீசார் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த அவருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள், வீடியோக்களை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கிரீஷ்மா வீட்டில் இருந்த விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். கிரீஷ்மா, தாய் சிந்து, மாமா நிர்மல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது.
ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்ற சம்பவத்தின் ஆதாரங்களை அழித்ததாக இளம்பெண்ணின் தாய்மாமா நிர்மல் குமாரனும் குற்றவாளி என உறுதியாகி உள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் கிரிஷ்மாவின் தாயார் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி தரப்பில் வாதம் கேட்ட பின்பு, தண்டனை தீர்ப்புக்கான விவரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஷாரோன்ராஜை கொலை செய்த கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அவரின் தாய்மாமா நிர்மலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
January 20, 2025 11:47 AM IST
Sharon Raj murder case | ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!