Last Updated:
ஆர்.ஜி. கர் மருத்துவமனை வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய் ராய் சிறை அதிகாரிகளிடம் இரு விஷயங்களை கேட்டுள்ளார். அதற்கு அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.ஜி. கர் மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்தது. அதுமட்டுமின்றி அவருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்கம் அரசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சீல்டா கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நேற்று (21ம் தேதி) சஞ்சய் ராய் தனது சிறை அறையில் இருந்து சில மணி நேரம் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் விசாரணை முடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பிரெசிடன்சி சிறையில் அடைத்தனர். பிரெசிடன்சி சிறையில், பொய்ல பாஷ் பிளாக்கில் உள்ள தனி சிறையில், அறை எண் 6ல் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டார். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது மட்டுமே அவர் வெளியே அழைத்து வரப்பட்டார். மற்ற நேரங்களில் அவர் முழுக்க சிறை அறையிலேயே அடைக்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படும் நபர்களில் விசாரணை கைதிகள் குறைவான நேரமும், தண்டனை உறுதியான கைதிகள் காலை முதல் மாலை வரையிலும், சிறை அறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறை வளாகத்தில் இருக்கும் பணிகளை செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்காக அவர்களுக்கு தினக்கூலி வரவு வைக்கப்பட்டு இறுதியாக அவர்களிடத்தில் கொடுக்கப்படும். ஆனால், பாதுகாப்பு காரணமாக சஞ்சய் ராய் குறைந்த நேரம் மட்டுமே அறையில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை கைதியில் இருந்துவந்த சஞ்சய் ராய் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று (21ம் தேதி) குறைந்த நேரம் சிறை அறையில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும், அவர் தொடர்ந்து சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
நியூஸ் 18 நெட்வர்க் இந்திக்கு கிடைத்த தகவலின் படி, அவர் சிறை அதிகாரிகளிடம், நான் குற்றமற்றவன். அப்பா இறந்த பிறகு, என் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு தங்கையின் படிப்புக்காக உதவி செய்தேன் என்று தெரிவித்து வருகிறாராம்.
குறிப்பாக சஞ்சய் ராய் சிறை அதிகாரிகளிடம், தனக்கு ஒரு நோட்டும், பேனாவும் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் எது குறித்து எழுதப்போகிறார் என்று தெளிவாக தெரியாத சூழலிலும், அவருக்கு நோட்டும், பேனாவும் வழங்க சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக நியூஸ் 18 நெட்வர்க்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.
January 22, 2025 3:11 PM IST
தண்டனை பெற்ற பின் சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் ராய் கேட்ட இரு விஷயங்கள்.. நியூஸ் 18க்கு கிடைத்த தகவல்