வனவிலங்குகளால் பயிா்கள் தொடா்ந்து சேதமடைந்து வருவதாக, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
புலிகள் காப்பக துணை இயக்குநா் ரமேஷ்வரன் தலைமை வகித்தாா். வனச் சரகா் யோகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா், களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.
விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடா்ந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறையினா் தொடா்ந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் துணை இயக்குநா் தெரிவித்தாா்.