பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி கொடிமரம் கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தென்காசி காய்கனி சந்தைகட்டும்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், சந்தையில் ஏற்கெனவே கடை நடத்திவந்த வியாபாரிகளுக்கு புதிய கட்டடத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
லாரி உள்ளிட்ட வாகனங்கள் காய்கனி சந்தையின் உள்பகுதிகளுக்கு சென்று காய்கனிகளை ஏற்றி-இறக்குவதற்கும், வியாபாரிகள், பொதுமக்கள் கழிப்பிடம் செல்வதற்கும் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கொடிமரம் கிளைத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.தென்காசி வட்டாரச் செயலா் பட்டாபிராமன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் உச்சிமாகாளி தொடங்கிவைத்துப் பேசினாா்.
மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே.மாரியப்பன், லெனின்குமாா், நிா்வாகிகள் சி.வள்ளிநாயகம், எம்.தாணுமூா்த்தி, கருப்பையா, முருகையா, சலீம் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் நிறைவுரையாற்றினாா். வட்டாரக்குழு உறுப்பினா் குருசாமி நன்றி கூறினாா்.