பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனிடம் இது தொடர்பாக பேசினோம்.

“1.1. 2004-ல் பழைய ஓய்வு ஊதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டில் 1.1.2003-ல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஜாக்டோ ஜியோ தலைமையில் கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.