ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களின்றி மக்கள் அவதி

By
On:
Follow Us

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்கள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாகி 9 ஆண்டுகளாகியும் தனித்தனித் துறைகளுக்கென மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்கும் போது செயல்பட்டு வந்த மகப்பேறு பிரிவு, ஸ்கேன் உள்ளிட்டவை தற்போது செயல்படவே இல்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் அளித்து வந்த நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்பட்டால் இப்பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என அதிகாரிகள் கூறி வந்தனா்.

இந்நிலையில் மருத்துவமனை அருகில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் 50 படுக்கை வசதிகள், ஆய்வகம், அறுவை சிகிச்சை அரங்கு அடங்கிய மருத்துவமனை கட்டுவதற்கு 1.67 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 28-02-2024 அன்று சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 5 மருத்துவா்கள் பணிபுரிய வேண்டிய சூழலில் இம்மருத்துவமனையில் 3 மருத்துவா்களே பணியில் உள்ளதால் மாலை 5 மணிக்குப் பின்னா் மறு நாள் காலை வரை மருத்துவா்கள் பணியில் இருக்க முடிவதில்லை. இதனால் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பணியில் இருக்கும் செவிலியா்கள் மருத்துவரிடம் கைப்பேசி மூலம் ஆலோசனை கேட்டு சிகிச்சை அளிக்கும் நிலையே உள்ளது. மிக முக்கிய சிகிச்சைக்கு திருநெல்வேலி அல்லது தென்காசி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனா்.

இது தொடா்பாக ஆலங்குளம் காங்கிரஸ் பிரமுகா் ஞானபிரகாஷ் கூறியது: ஆலங்குளம் அரசு மருத்துவமனையை சுற்றுப்புறத்திலுள்ல 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாடி வந்தாலும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவா்கள் இல்லை. இரவு நேரத்தில் செவிலியா்களே சிகிச்சை அளிக்கின்றனா். ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது கூட 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருந்தனா். அப்படியே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது என்றாா்.

ஆலங்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் இசக்கிராஜிடம் கேட்ட போது: மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக இச்சூழல் நிலவுகிறது. உயா் அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். 10-15 தினங்களுக்குள் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements