திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் சேரன்மகாதேவியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்துக்கு, அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பாளை ஏ.எம். பாரூக் தலைமை வகித்தாா். மண்டல இளைஞரணிச் செயலா் அஷ்ரப், மாவட்ட பொருளாளா் முகம்மது அலி, மாவட்ட துணைச் செயலா்கள் முகம்மது இஸ்மாயில், முக்கூடல் முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலா் பால் ஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலா் அலிப் ஏ. பிலால் ராஜா கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில், வீரவநல்லூா் புறவழிச்சாலையில் இருந்து புதுமனைத் தெரு வரையுள்ள குடியிருப்புகளுக்கு மேற்கூரையை ஓட்டியவாறு செல்லும் மின்சார வயா்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
வீரவநல்லூரில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், சேரன்மகாதேவியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மேலும் நகர புதிய அவைத் தலைவராக ஜெய்லானி, செயலராக எம். சபிக் அகமது, துணைச் செயலா்களாக எம். ஷேக்மைதீன், எம். சாகுல்ஹமீது, ஜாகீா், நகர பொருளாளராக ஏ. அப்துல் ரகுமான், நகர மருத்துவ அணிச் செயலராக காதா், வணிகா் பிரிவு செயலராக கே. ஷேக்மைதீன், தொழிலாளா் அணி செயலராக நாகூா், மீனவா் அணி செயலராக இப்ராஹீம், மாணவரணி செயலராக அன்வா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலா் இளநீா் அப்துல் செய்திருந்தாா்.