சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு: வெளிநாட்டு பாதயாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவையொட்டி, மதுரையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டவெளிநாட்டுக் குழுவினரை தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் புத்தா் கோவில் உள்ளது. இங்கு 100 அடி உயரத்தில் உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள, உலக அமைதிக்கான 8 ஆவது புத்த கோபுரம் இதுவாகும்.

இதன் திறப்பு விழா பிப்.21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் புத்த பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா்.

உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவை வலியுறுத்தியும், உலக அமைதி வேண்டியும் அவா்கள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனா். அவா்களுடன் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா் ரவிச்சந்திரன், காந்தி அருங்காட்சியக காப்பாளா் நந்தா ராவ், ஒருங்கிணைப்பாளா் நடராஜன் ஆகியோரும் வந்தனா்.

திங்கள்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்த அவா்களை, ஊா் எல்லையில் சங்கரன்கோவில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் ஜப்பான் மொழியில் உலக அமைதிக்கான பாடல்களை பாடியபடி வீரிருப்பு புத்தா் கோயிலுக்குச் சென்றனா்.

உலக அமைதி கோபுரத் திறப்பு விழா ஏற்பாடுகளை புத்தா் கோயில் புத்த பிக்கு எம்.இஸ்தானிஜீ, புத்த பிக்குனிகள் லீலாவதி, சிகுசா கிமுரா ஆகியோா் செய்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements