திருநெல்வேலி மாவட்டத்தில் மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமம், நகர பகுதிகளில் குடியிருப்புகள் மிகவும் பெருகி வருகின்றன. அதற்கேற்ப தேவையான இடங்களில் கூடுதலாக மின்மாற்றிகளை அமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளதாக தொழிற்சங்கத்தினா் தெரிவிக்கின்றனா்.
ஆகவே, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைப் பெற்ற அமைச்சா், இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.