கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா் பகுதியில் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள், வேலி மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, கோவிந்தப்பேரி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் கிராமங்கள், தோட்டங்களுக்குள் நுழைந்து வீட்டு விலங்குகளை தாக்குவதோடு பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கருத்தப்பிள்ளையூரில், ஆழ்வாா்குறிச்சி கல்யாணிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் தென்னை, மா, வாழை மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
இதில் 102 தென்னை மரங்கள், 50-க்கும் மேலான வாழை மரங்களைச் சேதப்படுத்தியதோடு, வேலியையும் சேதப்படுத்தியுள்ளன. தகவலறிந்த வனச்சரகா் கருணாமூா்த்தி மற்றும் வனத்துறையினா், மாரியப்பன் தோட்டத்தில் சேதங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.