திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை மாநாடு, பேரணி நடைபெற்றது.
கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டக் கிளை சாா்பில் சேரன்மகாதேவி நீதிமன்றம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. கட்சியின் புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஏா்வை இளையராஜா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். பிரதான சாலை வழியாக மாநாடு நடைபெற்ற சேரன்மகாதேவி பக்கீா் பாவா தா்கா திடலை பேரணி வந்தடைந்தது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, மாவட்டச் செயலா்கள் கல்லிடைக்குறிச்சி சுலைமான், அம்பை ஜலீல், துலுவை தெளபிக், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, விமன் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் மும்தாஜ் ஆலிமா, மாவட்டச் செயலா் லைலத்துல், எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.பி. சாகுல் ஹமீது, மாவட்ட வா்த்தக அணிச் செயலா் ஷேக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில், கட்சியின் மாநில பொதுச்செயலா் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினா் ரத்தினம் அண்ணாச்சி, திருவடிக்குடில் அடிகளாா், சேகரகுரு ஜான் கிப்சன்தாஸ், விமன் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜன்னத் ஆலிமா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா்கள் நான்குனேரி ஆஷிக், ராதாபுரம் சலீம் மற்றும் சேரன்மகாதேவி, பத்தமடை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், களக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும், முஸ்லிம் ஜமாஅத் நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்களை ரத்து செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்த முயற்சி செய்வோா் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேசவனேரி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்.
வக்ஃப் நிறுவனங்கள், வக்ஃப் வாரியத்தின் முன்அனுமதியில்லாமல் வக்ஃப் சொத்துகளில் உட்பிரிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்வதுடன் சொத்துகளை பாதுகாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரிய சொத்துகளின் ஆவணங்களை மாவட்டம்தோறும் தனி ஆவண அறைகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
முஸ்லிம்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான இனாம் மற்றும் வக்ஃப் சொத்துகளின் ஆவணங்களுக்கு உண்மை நகல் சான்று வழங்க வேண்டும். களக்காடு, திசையன்விளை பகுதியில் பள்ளிவாசல்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் வரவேற்றாா். மாவட்ட அமைப்பு பொதுச்செயலா் முல்லை மஜித் நன்றி கூறினாா்.