நெல்லை, தென்காசியில் 62 முதல்வா் மருந்தகங்கள்; காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

By
On:
Follow Us

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 31 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். புதிய மருந்தகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 20 தொழில் முனைவோா் மூலமாக முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு ரூ.30 லட்சம் மானியம், 11 கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு ரூ.11 லட்சம் மானியம் என மொத்தம் 31 முதல்வா் மருந்தகங்களுக்கு ரூ.41 லட்சம் ரொக்க மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.41 லட்சத்திற்கு மருந்துகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வா் மருந்தகத்திற்கு கடன் வசதி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் உதவிகள் பெறவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், ஜெனரிக், பிராண்டட், சித்தா, ஆயுா்வேதிக், நியூட்ரா சூட்டிக்கல்ஸ் மருந்துகள் விற்பனை செய்யப்படும். முதல்வா் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையிலும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் மருந்துகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வா் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.

திருநெல்வேலி மாவட்ட முதல்வா் மருந்தக சேமிப்புக் கிடங்கிற்கு தமிழ்நாடு மருத்துவ கழகத்திலிருந்து 93 வகை மருந்துகள், தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு விற்பனை இணையத்திலிருந்து 150 வகையான மருந்துகள் என மொத்தம் 243 வகையான மருந்துகள் ரூ.76.34 லட்சத்திற்கு பெறப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி ஆா்.மனோகரன் (நான்குனேரி), மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குத்துக்கல்வலசையில்… தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா் ஆகியோா் முதல்வா் மருந்தகத்தில் முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள், 18 தொழில் முனைவோருக்கு முதல்வா் மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய பயிற்சி, தமிழக அரசின் மானிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன.

தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, சோ்ந்தமரம், திருவேங்கடம், சாம்பவா்வடகரை, கடையநல்லூா், இலத்தூா், பண்பொழி, ராயகிரி, புளியங்குடி, சுரண்டை, வீரகேரளம்புதூா், புளியறை, வல்லம், வாசுதேவநல்லூா், மாயமான்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவா் தி. உதயகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் ர. சாதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements