இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில், மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி விழுந்தது.
ஏர் இந்தியாவின் கூற்றின்படி இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இந்த விபத்து விமானத்தில் பயணித்தவர்களின் நம்பிக்கையைப் பறித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்று பிரதிக் ஜோஷியின் குடும்ப மரணம்.
மென்பொருள் நிபுணர்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக் ஜோஷி. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்க, குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற, மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்ய மூன்று குழந்தைகளையும், மனைவியையும் லண்டன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.