அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 900,000 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளதுடன், அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடுகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை பெறும் நடவடிக்கை வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.
அத்துடன், இரண்டாம் கட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட 815,556 விண்ணப்பங்களில் 766,508 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதில், 717,309 விண்ணப்பங்கள் குழு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும், 715,146 விண்ணப்பங்கள் பிரதேச செயலாளரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.