இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை தமிழகத்திற்கு வரும் தருகிறார். மாலத்தீவில் இருக்கும் பிரதமர் மோடி, நேரடியாக இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து, ரூ.452 கோடி மதிப்பில் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் மூலும், இரவு நேர சேவை அங்கு தொடங்கப்படுகிறது. மேலும், நவீன முறையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், ரூ.2, 351 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கிறார். அதாவது, தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் 2ஆம் அங்கமாக சோழபுரம் சேத்தியாதோப்பு வரையில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுக சாலை ரூ.200 கோடி மதிப்பில் 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது- அதையும் அவர் திறந்து வைக்கிறார்.
மேலும், மதுரை – போடிநாயக்கனூர் இடையே ரூ.99 கோடி மதிப்பில் செய்யப்பட்ட மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை, நாகர்கோவில் கன்னியாகுமரி இடையே ரூ.650 கோடி மதிப்பில் போடப்பட்ட இரட்டை ரயில் பாதை, நெல்லை மேலப்பாளையம் இடையே முடிக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
அதைப் போல, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற அமைப்பு நிறுவப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியாக தூத்துக்குடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து திருச்சி செல்கிறார். ஓய்வு எடுத்த பிறகு, 2025 ஜூலை 27ஆம் தேதி திருச்சியில் இருந்து அரியலூர் செல்கிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவிழாவில் கலந்து கொள்கிறார். அங்கு ராஜேந்திர நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார்.
பிரதமர் மோடியின் வருகையொட்டி, தூத்துக்குடி, அரியலூர், திருச்சி மாவட்டங்கல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் முழுவதும் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.